ஜம்முவில் 6 , காஷ்மீரில் ஒரு சட்டமன்ற இடமும் அதிகரிக்கப்படும்..?- எல்லை நிர்ணய குழு ..!
எல்லை நிர்ணய ஆணைய கூட்டத்தில், ஜம்மு பிரிவுக்கு 6 இடங்களையும், காஷ்மீர் பிரிவுக்கு கூடுதலாக ஒரு இடமும் எல்லை நிர்ணய குழு முன்மொழிந்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டமன்ற இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான எல்லை நிர்ணய ஆணையக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணையக் கூட்டத்தில் முதல் முறையாக அனைத்து இணை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் இன்று நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணையக் கூட்டத்தில், ஆணையத்தின் குழு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய வடிவத்தை முன்வைத்தது.
இதில், ஏழு கூடுதல் சட்டசபை இடங்கள் முன்மொழியப்பட்டன. அதில், ஜம்மு பிரிவிற்கு 6 இடங்களும், காஷ்மீர் பிரிவிற்கு ஒரு இடமும் என்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஜம்முவில் தற்போதுள்ள 37 இடங்களிலிருந்து 43 ஆகவும், காஷ்மீரில் தற்போதைய 46 இடங்களிலிருந்து 47 ஆக இருக்கும். டிசம்பர் 31, 2021க்குள் தங்கள் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு இணை உறுப்பினர்களை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆணையத்தின் வரைவுக்கு தேசிய மாநாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.