செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 6 பேர் ஆந்திராவில் கைது…!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 6 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை சுமந்து செல்வதை கண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடிய நிலையில், 6 பேரை மட்டும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும், இவர்களிடம் இருந்த செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பலர் குழுவாக ஒரு வாரத்திற்கு முன்பாகவே செம்மரம் வெட்ட வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள இருவர் இருந்ததால், இருவரும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.