தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர் கே.டி.ஜலீலிடம் 6 மணி நேரம் விசாரணை..!
உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்தது. முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி உடன் உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து நேற்று கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
நேற்று அமலாக்கத்துறை அலுவலத்தில் உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் ஆஜரான சில மணிநேரங்களுக்கு பின்னர் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.டி.ஜலீலை மீண்டும் அமலாக்க இயக்குநரகம் விசாரிக்க வாய்ப்புள்ளது. நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்று அமலாக்கத்துறை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.