முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைத்தேர்தலில் களமிறக்கிய பாஜக.!
Elections 2024 : இமாச்சலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் . எம்.எல்.ஏ.க்களுக்கும் பாஜக இடைத்தேர்தலில் சீட் வழங்கி இருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் 40 உறுப்பினர்களை கொண்டிருந்த ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியது. அதே சமயம் 25 உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இந்த மாநிலங்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர், சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்று இருந்தார்.
அதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 29-ந்தேதி பாஜகவுக்கு வாக்களித்திருந்த அந்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சுதிர் சர்மா, ராஜிந்தர் ராணா, ரவி தாக்கூர், சேதன்யா சர்மா , இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூட்டோ ஆகியோர் மத்திய அமைச்சரும் ஹமிர்பூர் எம்பியுமான அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோருடைய முன்னிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர்.
மேலும் இவர்கள் ஆறு பேரும் வரும் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தரம்ஷாலா தொகுதியில் சுதிர் சர்மா, சுஜான்பூரில் ராஜீந்தர் ராணா, பர்சாரில் இந்தர் தத் லகன்பால், காக்ரெட்டில் சைதன்யா சர்மா, குட்லேஹரில் தேவிந்தர் குமார் பூட்டோ, ஸ்பிதியில் ரவி தாக்கூர் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்கள்.
மேலும், மலை மாநிலங்களில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 -ஆம் கட்ட பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு நாளான வரும் ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேதியில் தான் இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
BJP releases a list of candidates for upcoming by-elections in Gujarat, Himachal Pradesh, Karnataka and West Bengal pic.twitter.com/xiZsleW91d
— ANI (@ANI) March 26, 2024