இந்தியாவில் அக்டோபருக்குள் 5ஜி சேவை.. முதலில் இந்த 13 முக்கிய நகரங்களில் தான்!

Default Image

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65% ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ.

இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி முடித்திருந்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் நேற்று நிறைவு பெற்றது. இதில், ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக அளவில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் ஏலத்தில் 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு ஸ்பெக்ட்ரம் ஏலத்தை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்ததால், ஐந்தாவது தலைமுறை (5ஜி) தொலைத்தொடர்பு சேவைகள் அக்டோபர் 2022 க்குள் இந்தியாவில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏலம் நிறைவடைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் அனுமதி மற்றும் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் அக்டோபருக்குள் 5ஜியை நாட்டில் அறிமுகப்படுத்த முடியும் என்று தெரிய வருகிறது.

5ஜி அலைக்கற்றை ஏலம், நாட்டின் தொலைத்தொடர்புத் துறை 5ஜி முன்னேற்றத்தில் நீண்ட தூரம் வந்திருப்பதைக் குறிக்கிறது என்றும் ஸ்பெக்ட்ரம் சிறப்பாக கிடைப்பது நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் எனவும் கூறினார். எனவே, நாடு முழுவதும் உள்ள 13 நகரங்களில் தொடக்கத்தில் 5G சேவை கிடைக்கும். அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் 5G சேவை முதலில் கிடைக்கும்.

மொத்தம் 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை, 51,236 மெகா ஹெர்ட்ஸ் அல்லது சுமார் 71 சதவீதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார். கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 40 சுற்று ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.1,50,173 கோடி. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனம் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65 சதவீதமாக ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்