இன்று பயன்பாட்டுக்கு வருகிறது 5G சேவை..!!
இந்தியாவில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
இந்தியாவில் அதிவேக அலைக்கற்றையான 5ஜி சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி இன்று டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்’ தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த ஜூலை 26-ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குபெற்றன. இதில் முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர். இதுவரை மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலத்தை மத்திய அரசு பெற்று இருக்கிறது.
இதையடுத்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதாக அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் இன்று முதல் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வருகிறது. முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.