கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 6 நாட்களுக்கு பின் சுகாதாரப் பணியாளர் மரணம்!
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 56 வயதான சுகாதார பணியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்ட ஆறு நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குருகிரமை சேர்ந்தவர், 56 வயதான லாஜ்வந்தி. இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி இவரும் கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு நாட்களுக்கு பின், லாஜ்வந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த லாஜ்வந்தியின் கணவர், கொரோனா தடுப்பூசி போட்டதால் தன் மனைவி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அவரின் மரணத்திற்கு மரணத்துக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே மரணம் குறித்த காரணம் தெரியவரும் எனவும், தடுப்பூசி போட்டதால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.