நவி மும்பையில் 524 கட்டிடங்கள் ஆபத்தானவை..! குடியிருப்பாளர்கள் காலி செய்யுமாறு மாநகராட்சி வலிறுத்தல்..!
நவி மும்பையில் 524 கட்டிடங்கள் ஆபத்தானவை என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் நர்வேகர் தெரிவித்துள்ளார்.
நவி மும்பையில் உள்ள 524 கட்டிடங்கள், நகர எல்லையில் விரிவான ஆய்வுக்குப் பிறகு ஆபத்தானவை என நவி மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே, விபத்து மற்றும் உயிரிழப்பைத் தவிர்க்க, அபாயகரமான கட்டடங்களின் உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் உடனடியாக காலி செய்யுமாறு நவி மும்பை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் நர்வேகர் வலிறுத்தியுள்ளார்.
கட்டிடத்தின் நிலையை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகளின் பட்டியல் www.nmmc.gov.in என்ற குடிமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் 61 கட்டிடங்கள் சி(C) வகையைச் சேர்ந்தவை, அதாவது மிகவும் ஆபத்தான மற்றும் ஆக்கிரமிப்பிற்கு தகுதியற்ற, உடனடியாக இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் ஆகும். 114 கட்டிடங்கள் சி-2ஏ (C-2A) பிரிவில் உள்ளன.
இவை காலி செய்யப்பட வேண்டிய மற்றும் கட்டுமானத்தில் உள்ள பழுதுகளை சரிபார்க்க வேண்டிய நிலைமையில் உள்ள கட்டிடங்கள் ஆகும். மேலும் 300 கட்டிடங்கள் சி-2பி (C-2B) பிரிவில் உள்ளன. இதில் வசிப்பவர்கள் கட்டிடத்தை காலி செய்ய தேவையில்லை, கட்டிடத்தை பழுதுகளை நீக்கினால் மட்டுமே போதும் மற்றும் சி3 (C3) பிரிவுகள் உள்ள 49 கட்டிடங்கள் சிறிதளவு பழுதான கட்டிடங்கள் ஆகும் என்று நவி மும்பை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் நர்வேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் c1 பிரிவில் வகைப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் வினியோகம் உடனடியாக துண்டிக்கப்படும். இந்த பிரிவை தவிர மற்ற பிரிவில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் பழுது பார்ப்புகளை மேற்கொண்டு குடிமை அமைப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்கு ஏற்றது என்று சான்றிதழ் பெற்ற பிறகு அதில் வசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.