இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் நிதி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5,000 ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும், இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறமிருக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஒரு சிறிய உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், மேலும் இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசு உதவுவதோடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள மக்கள் அத்தியாவசிய உதவிகள் இன்றி பிறர் இருக்கும் பொழுது தேவைப்படுபவர்களுக்கு முன்வந்து உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.