தினமும் கொரோனா நோயாளிகளுக்கு 5,000 வழங்கப்படும் – ஹரியானா முதல்வர் அறிவிப்பு!
ஹரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே தான் செல்கிறது. அது போல ஹரியானாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி குறைவாக காணப்படுவதால் பலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறக்கடிய பல நோயாளிகளின் குடும்பத்தினர் மிக எளிமையான பின்புலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் சரியாக பணம் கட்ட முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளுக்கு தினமும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் தினமும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அதிகபட்சமாக 7 நாட்களுக்கு என ஒரு நபருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது அவர்களுடைய மருத்துவ செலவுக்கான தொகை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல தனியார் மருத்துவமனைகளும் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தினமும் ஒதுக்க வேண்டும் எனவும், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஏழு நாட்களுக்கு 7000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.