சபரிமலையில் தினமும் 2,000 பக்தர்களுக்கு பதில் 5,000 பேருக்கு அனுமதி..!
சபரிமலையில் தினமும் 2,000 பக்தர்களுக்கு பதிலாக 5,000 பேருக்கு அனுமதி என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 1-ம் தேதி இதற்கான புக்கிங் தொடங்கிய நிலையில் 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்கான டிக்கெட்டு புக்கிங் செய்யப்பட்டது. இதனால், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, முன்பைவிட தினமும் கூடுதலாக 1,000 பக்தர்களை அனுமதிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல தரப்பில் இருந்து கேரள அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் 5,000 பக்தர்கள் அனுமதி என திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.