அமைச்சர், எம்பி, எம்எல்ஏ மகள்கள் உட்பட சுமார் 500 பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம், நகைகளை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலத்தில் பல பெண்களை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட ஒரு வாலிபர், அவர்களை காதலிப்பது போல் நடித்து கோடிக்கணக்கான பணத்தை பறித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின்பேரில் ஐதராபாத், கம்மம், நிஜாமாபாத், பீமாவரம், நரசாபுரம், மெகபூப் நகர், ஆக்கிவேடி, சைபராபாத் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜ மகேந்திரவரம் கம்பானசெருவு பகுதியை சேர்ந்த வம்சி கிருஷ்ணா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து டிஎஸ்பி ரவிவர்மா நேற்று கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள வம்சி கிருஷ்ணா, தனது பூர்வீக சொத்துக்களை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு பிடெக் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எளிதாக பணம் சம்பாதிக்க சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளார். அதன்படி அழகான வாலிபரின் புகைப்படத்தை தனது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்துள்ளார். வசதியான பெண்களை தொடர்பு கொண்டு ஆசையாக பேசியுள்ளார். சாதாரண பெண்களிடம் தொடர்புகொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறி நட்பை வளர்த்துள்ளார். இதில் தனது காதல் வலையில் விழும் பெண்களை நேரில் சந்தித்தோ, வீடியோ கால்மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களிடம் நகை, பணத்தை ஏமாற்றியுள்ளார்.
மோசடி புகார் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு ஐதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வந்து தலைமறைவான அவர், 45 நாட்களில் 25 சிம்கார்டுகளை மாற்றி வெவ்வேறு பெண்களிடம் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் காக்கிநாடா, ரங்கராயா மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர், வம்சி கிருஷ்ணா மீது புகார் கொடுத்தார். அதில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.70 ஆயிரம் மற்றும் 5 சவரன் நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காக்கிநாடா ரயில் நிலையம் அருகே இருந்தபோது வம்சி கிருஷ்ணா சிக்கினார்.
கடந்த 2 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளார். அவ்வாறு மோசடி செய்த பணத்தை குதிரை, கிரிக்கெட் பந்தயத்தில் வைத்து உல்லாச வாழ்க்கையை அனுபவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். வம்சி கிருஷ்ணா வலையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த அமைச்சரின் மகளும், ஆந்திராவில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் தொழிலதிபர்களின் மகள்களும் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.தற்போது வம்சி கிருஷ்ணா காவல்துறையின் தீவிர விசாரணையில் உள்ளார்.இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..