டெல்லியில் மிஸ்டு கால்கள் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி.!
டெல்லியில் மிஸ்டு கால்கள் மூலம் ஒருவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது.
டெல்லியில் செக்யூரிட்டி நிறுவன இயக்குனரின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. டெல்லியின் மிகப்பெரிய ஆன்லைன் மோசடியாக இது கருதப்படுகிறது. ஓடிபி(OTP) எதுவும் கேட்கப்படாமல் அவருக்கு அடிக்கடி மிஸ்டு கால்கள் கொடுத்து அவரது வங்கியிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர்.
அக்டோபர் 19 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மிஸ்டு கால்கள் வந்துள்ளது, சில அழைப்புகளை அவர் எடுத்துள்ளார், மற்றவற்றை நிராகரித்துள்ளார். திடீரென்று அவர் மொபைலை பார்த்த போது 50லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவலின்படி ஆன்லைன் மோசடிக்காரர்கள், அந்த நபரின் நிறுவனத்தின் நடப்புக் கணக்கில் இருந்து வெவ்வேறு தனித்தனி நபர்களின் கணக்குகளுக்கு பணப்பரிவர்தனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலிசார் கூறுகையில் ஓடிபி எதுவும் இல்லாமல் இந்த பரிவர்தனைகள் நடந்துள்ளன, மேலும் அவர்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள சிம் போன்று போலியான சிம் கார்டுகள் பயன்படுத்தி இருக்கலாம் என்றும், மிஸ்டு கால்கள் மூலம் ஓடிபியை பதிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.