லோனாவாலா நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட 5 பேர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
லோனாவாலா : இடத்தில உள்ள புஷி அணையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் “தடைசெய்யப்பட்ட பகுதியில்” அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புனே நகரின் ஹடாப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 19 பேர் ஒன்றாக சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை மழைக்கால சுற்றுலாவுக்காக லோனாவாலாவுக்கு தனியார் வாகனத்தில் வந்தனர். சமீபத்தில் ஜூன் 22 அன்று திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடியும் இதில் அடங்கும்.
அவர்கள் அனைவரும், லோனாவாலாவில் உள்ள புஷி அணைக்கு பின்புறம் உள்ள உள்பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது கனமழை காரணமாக திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதன் பின், 10 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மற்ற ஐந்து பேரும் அணை நீரை இணைக்கும் நீர்த்தேக்கத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவலை தெரிவித்தனர்.
வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில், வீடியோவில், பாதிக்கப்பட்டவர்களுடன் கிட்டத்தட்ட 10 பேர் வெள்ளத்தின் நடுவில் சிக்கிக்கொண்டு உதவிக்காக அலறுகிறார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றவும் முயற்சி செய்தனர். ஆனால், வெள்ள நீர் வரத்து அதிகரித்ததால், இரண்டு குழந்தைகளை சுமந்த பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவர்களைத் தொடர்ந்து எஞ்சியவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.
Horrible Incident has come to light near the backwaters of Bhushi Dam Lonavala area of Pune (A family was enjoying a rainy day here, when they slipped into the dam) 💔
pic.twitter.com/F26i8hBM8y— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 1, 2024
இதனையடுத்து, ஒரு நாள் கழித்து, மீட்பு பணி மும்மரமாக நடைபெற்ற போது இரண்டு உடல்கள் திங்களன்று மீட்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டதில் ஒன்பது வயது சிறுமி மரியா அகில் சயாத் மற்றும் மாலையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு வயது அட்னான் சபாஹத் அன்சாரியின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக லோனாவாலா நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுஹாஸ் ஜக்தாப் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் நடந்த இடம் இந்திய ரயில்வே மற்றும் வனத்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட “தடைசெய்யப்பட்ட பகுதி” என்று போலீசார் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.