லடாக்கில் மலரும் 5 புதிய மாவட்டங்கள்.. பெயர் வைத்த அமித்ஷா.!
டெல்லி : லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜான்ஸ்கார் (Zanskar), ட்ராஸ் (Drass) , ஷாம் (Sham), நுப்ரா (Nubra), சாங்தாங் (Changthang) ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. லடாக்கில் ஏற்கனவே லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ளன.
அந்த இரண்டு மாவட்டங்களும் அவற்றின் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களைக் கொண்டுள்ளன, அவை அவற்றை நிர்வகிக்கின்றன. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, லடாக்கில் மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும்.
இந்த புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களிடம் எளிதில் சென்றுசேரும். நல்நிர்வாகத்தை ஒவ்வொரு மூலை முடுக்கும் கொண்டு செல்லவே இந்த முயற்சி என்றும், வளர்ந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையே இந்த முடிவுக்கு காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கடந்த 2019 வரை, லடாக், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில், அந்த ஆண்டு மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது குறிப்பிடத்தக்கது.