ஹரியானாவில் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்ட 5 மினி பஸ்கள்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்புலா பகுதியை கொரோனா சிகிச்சைக்காக 5 மினி பஸ்கள் ஆம்புலன்களாக மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தினமும் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவமனையில் படுக்கை வச,தி மருந்து வசதிகள், ஆக்சிஜன் என அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆம்புலன்சில் காத்திருக்க கூடிய நோயாளிகள் பலர் அப்படியே உயிரிழந்து விடுகின்றனர். இவற்றை சரி செய்வதற்காக பல்வேறு மாநில அரசுகளும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுபோல தற்போது ஹரியானா மாநிலத்தில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை 5 மினி பஸ்களை ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளது.
மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பஞ்ச்புலா பகுதியில் 5 மினி பஸ்கள் ஆம்புலன்ஸ்கள் ஆக மாற்றப்பட்டு, ஒவ்வொரு பஸ்களிலும் நான்கு ஆக்சிஜன் படுக்கைகளும் தேவையான மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் பஸ்களை போக்குவரத்து துறை ஊழியர்கள் இயக்குவார்கள் எனவும், இவற்றில் மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.