செப்டம்பர் 1 முதல் கர்நாடகாவில் தினமும் 5 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம் – கர்நாடக முதல்வர்!
வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் தினமும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவை ஒழிக்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்களை நேரில் சந்தித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், கர்நாடகாவின் தடுப்பூசி திட்டம் குறித்து எடுத்துரைத்துள்ளார். மேலும் கர்நாடகாவிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது இது குறித்து பேசியுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், கர்நாடக அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.