5 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்திய நிலையில் , 5 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை டெல்லி திரும்பினார்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நார்டிக் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். லண்டனில் இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் தெரசா மே மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார். அங்கு, பிரதமர் மாளிகையில் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தார். ஜெர்மனியின் பிரதமராக கடந்த மார்ச் மாதத்தில் 4வது முறை பதவியேற்ற பின்னர், மோடியை அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இரு நாட்டு வர்த்தக உறவுகள், சர்வதேச பிரச்சினைகளை இருநாட்டு தலைவர்களும் இரவு விருந்து நிகழ்ச்சியின் போது விவாதித்தனர்.
5 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று காலை டெல்லி திரும்பினார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். அங்கேயே இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.