4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் ..! 9 மணி நிலவரம் இதுதான் !
Lok Sabha Election 2024 : மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் (13-05-2024) நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஏற்கனவே மூன்று கட்டமாக கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே-7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் இன்று 4-ம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் மொத்தம் 25 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் 4 தொகுதிகள், தெலங்கானாவில் மொத்தம் 17 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள் என மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் 9 மணி நிலவரப்படி ஆந்திராவில் 9.05 சதவீதமும், பிஹாரில் 10.18 சதவீதமும், ஜம்மு & காஷ்மீரில் 5.07 சதவீதமும், ஜார்க்கண்டில் 11.78 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 14.97 சதவீதமும், மகாராஷ்ட்ராவில் 6.45 சதவீதமும், ஒடிசாவில் 9.23 சதவீதமும், தெலுங்கானாவில் 9.51 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 11.67 சதவீதமும் மற்றும் மேற்கு வங்கத்தில் 15.24 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த 96 தொகுதிகளிலும், மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த 4 கட்ட தேர்தலில், போட்டியிடும் அரசியல் பிரபலங்களும், திரைப்பட கலைஞர்களும், பொதுமக்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மேலும், 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.