காங்கிரஸ் ஆட்சியில் 48,20,69,00,00,000 ரூபாய் ஊழல்.. முதல் அத்தியாயத்தை வெளியிட்டது பாஜக!
காங்கிரஸ் ஆட்சியில் 48,20,69,00,00,000 ரூபாய் ஊழல் தொடர்பாக ‘காங்கிரஸ் கோப்புகளின்’ முதல் அத்தியாயத்தை பாஜக வெளியிட்டது.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான தேர்தல் பிரச்சாரத்தை பாஜக இப்போதே தொடங்கி விட்டது. அதாவது, காங்கிரஸ் ஆட்சியில் 48,20,69,00,00,000 ரூபாய் (ரூ.4.82 லட்சம் கோடி) ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘காங்கிரஸ் கோப்புகளின்’ முதல் அத்தியாயத்தை பாஜக தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் என்றால் ஊழல்:
பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சிக் காலத்தில், காங்கிரஸ் மீதான ஊழல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற முதல் அத்தியாயத்தை வெளியிட்டது. 70 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்களிடமிருந்து 48,20,69,00,00,000 ரூபாயை காங்கிரஸ் திருடியதாக குற்றம்சாட்டி, ‘காங்கிரஸ் என்றால் ஊழல்’ என்ற தலைப்பில் ஆளும் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டது.
பாஜக குற்றசாட்டு:
மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த தொகையை மக்கள் நலன், மேம்பாடு மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் காங்கிரஸ் அதை தவறாக பயன்படுத்தியதாக பாஜக கூறியுள்ளது. இந்த தொகையை 24 ஐஎன்எஸ் விக்ராந்த், 300 ரஃபேல் ஜெட் விமானங்கள் மற்றும் 1000 மங்கல் மிஷன்களை வாங்க பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் காங்கிரஸின் ஊழலால் நாடு பாதிக்கப்பட்டு அதன் வெற்றி ஏணியில் பின்தங்கியது என கூறியுள்ளனர்.
ஒரு இழந்த தசாப்தம்:
2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸின் ஆட்சிக் காலத்தை “ஒரு இழந்த தசாப்தம்” என்று பாஜக அழைக்கிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, தனது ஆட்சிக் காலத்தில் ஊழலைக் கண்டும் காணாததுபோல் இருந்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் அனைத்து நாளிதழ்களிலும் ஊழல் செய்திகள் நிறைந்திருந்தன. இதனால், ஒவ்வொரு இந்தியரும் வெட்கத்தில் தலை குனிந்தனர் என்றுள்ளனர்.
ஊழல் பட்டியல்:
மேலும் இந்த வீடியோவில், ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல், ரூ.1.76 லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல், ரூ.10,000 கோடி நூறு நாள் வேலை திட்டஊழல், ரூ.70,000 கோடி காமன்வெல்த் ஊழல், ரூ.362 கோடி ஹெலிகாப்டர் ஊழல், ரூ.12 கோடி ரயில்வே வாரிய ஊழல் என மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஊழலில் மூழ்கியிருந்தது என குற்றசாட்டி, இப்போதைய வீடியோ காங்கிரஸின் ஊழலின் ட்ரைலர் மட்டுமே, இன்னும் படம் முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Congress Files के पहले एपिसोड में देखिए, कैसे कांग्रेस राज में एक के बाद एक भ्रष्टाचार और घोटाले हुए… pic.twitter.com/vAZ7BDZtFi
— BJP (@BJP4India) April 2, 2023