CoWIN:18-44 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் பதிவு இல்லாமல் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்-மத்திய அரசு
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்து போராட தடுப்பூசி போடுமாறு மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவாக தடுப்பூசி போடுவதை அரசு முக்கியமாக முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் கோவின் தடுப்பூசி திட்டத்தில் தற்பொழுது 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேரடிபதிவு தொடங்கப்பட்டுள்ளது. என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இருப்பினும், இந்த வசதி அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும். தனியார் தடுப்பூசி மையங்களுக்கு இந்த வசதி கிடைக்காது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்கள் சுலபமாக தடுப்பூசி கிடைக்க இது உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது அந்தந்த மாநில / யூனியன்பிரதேச அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
இது தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாகவும், 18-44 வயதிற்குட்பட்ட தகுதியான பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு வசதியாகவும் இருக்கும்.இதனை அந்தந்த மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் உள்ளூர் சூழலின் அடிப்படையில் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி மையத்தில் நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு முன்பு ஆன்லைன் பதிவை அவசியமாக்கியது. ஆனால் ஆன்லைன் பதிவில் இரண்டு வகையான சிக்கல்கள் இருந்தன. முதலாவது, ஸ்மார்ட்போன்கள் இல்லாத கிராம மக்களுக்கு தடுப்பூசி முன்பதிவு செய்வதில் சிக்கல் இருந்தது. இது தவிர, தடுப்பூசி முன்பதிவு செய்த பிறகும் மக்கள் தடுப்பூசி போடும் மையத்திற்கு வரவில்லை என்றும் பல மாநிலங்களில் இருந்து செய்திகள் வந்தன.
எனவே இதுபோன்ற சூழ்நிலையில், தடுப்பூசி வீணாகப்போகிறது, ஆனால் இப்போது மீதமுள்ள தடுப்பூசி முன்பதிவு இல்லாமல் வரும் மக்களுக்கு இந்த புதிய வழிமுறைகளின் படி பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேரடிபதிவு வழிமுறைகளை எவ்வாறு பதிய வேண்டும்,அதற்கான வழிமுறைகள் என்னனென்ன என்பதை பற்றிய தெளிவான தகவல்களை அனைத்து மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரிகளுக்கும் அந்தந்த அரசுகள் வழங்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்ப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை 19.60 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.தற்போது பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 3 தடுப்பூசிகள்:
இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் -வி சில மாநிலங்களிலும் கிடைக்கிறது.