41 தொழிளர்கள் மீட்பு…! அரசியல் தலைவர்கள் பாராட்டு..!
கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களாக இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது. எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள்.
இந்த எலிவளைச் சுரங்க முறை மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்கி 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து மீட்கபட்ட தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி பதிவு
பிரதமர் மோடி அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நமது இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகவும் திருப்திகரமான விஷயம்.
இந்த சவாலான நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் காட்டிய பொறுமை மற்றும் தைரியத்தை பாராட்ட வேண்டும். அவரது துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஒரு அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர்.’ என பதிவிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் முர்மு பதிவு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்கள் அவர்கள் கடின உழைப்பு, மீட்பு முயற்சி தடைகளை சந்தித்தது, மனித சகிப்புத்தன்மைக்கு சான்றாக உள்ளது. அவர்களின் மன உறுதிக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றைச் செய்ய நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்ட அணிகள் மற்றும் அனைத்து நிபுணர்களையும் நான் வாழ்த்துகிறேன்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உத்தர்காசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 சவாலான நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டதைக் கேள்விப்பட்டதில் நிம்மதி. Silkyara சுரங்கப்பாதை மீட்புப் பணியில் அயராத முயற்சிகளை மேற்கொண்ட துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலி துளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சலான 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமை மற்றும் உறுதியை வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.