நிலச்சரிவால் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிதி – இமாச்சல பிரதேச முதல்வர்!
இமாச்சல பிரதேசத்திலுள்ள கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவின் பொழுது பாறைகள் உருண்டதால், அவ்வழியே வந்த சுற்றுலா வாகனத்தின் மீது பாறைகள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் இருந்த 9 பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அவர்கள் நேற்று அறிவித்திருந்தார்.
தற்போதும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவர்கள் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.