சீன கப்பல்களில் சிக்கி தவிக்கும் 39 இந்தியர்கள்!
சீன கடல் எல்லைக்குள் சிக்கியுள்ள இரண்டு கப்பல்களில் 39 இந்தியர்கள் உள்ளனர். இது தொடர்பாக சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
சீன கடல் எல்லைக்குள் சிக்கியுள்ள இரண்டு கப்பல்களில் 39 இந்தியர்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், எம்.வி. ஜக் ஆனந்த், சீனாவில் ஹெபெய் மாகாணத்தில் ஜிங்டாங் துறைமுகத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 23 இந்தியர்கள் இருப்பதாகவும், மற்றொரு கப்பலான எம்வி அனஸ்தீசியா கோபெய்டியன் துறைமுகத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது இதில் 16 இந்தியர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல்கள் சரக்கை வெளியேற்றுவதற்காக காத்திருக்கிறது. சீன அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருக்கிறது. கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை உள்ளூர் அரசு விதித்துள்ளதால், இந்த துறைமுகங்களில் கப்பல் ஊழியர்கள் மாற்ற அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வாகையில், சீன அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் கப்பலில் உள்ள இந்தியர்களின் தேவைகள் கவனிக்கபடுவது உறுதி செய்யவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.