கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 386 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 190 நாடுகளில் பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றனர். இந்த கொரோனா தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637-ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கை 38 ஐ எட்டியது. மேலும் கொரோனா சிகிச்சைக்காக ரயில்பெட்டிகளில் 3.2 லட்சம் படுக்கைகள் விரைவில் தயாராகும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் மாநாடு காரணமாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை போன்ற கூட்டங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.