31 ஆண்டுகளுக்கு முன்னால் ரத்தக்களரி நாளில் நடந்தது என்ன?
மே, 22, 1987. அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் மீரட் நகரம் பற்றி எரிந்தது, வகுப்புவாத மோதல்கள் தலைவிரித்தாடிய சமயம். உத்தரப்பிரதேச ஆயுதப் படையான பிஏசியின் 2 துப்பாக்கிகள் களவு போயின, இதன் மேஜர் ஒருவரின் உறவினர் ஒருவர் இந்தப் பகுதியில் ‘சமூக விரோதிகள்’ சிலரால் கொல்லப்பட்டதும் ஆயுதப்படையினரின் வெறியை ஏற்றியிருந்தது. இதனையடுத்து ஹஷிம்புரா பகுதியை ஆயுதப்படையினர் சுற்றி வளைத்தனர். வீடு வீடாகச் சென்று அனைவரையும் அடித்து உதைத்து குற்றவாளிகளைத் தேடும் படலத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதியோர், இளையோர் என்று 42-45 பேர்களை 41வது பட்டாலியனின் சி-கம்பெனியைச் சேர்ந்த மஞ்சள் லாரியில் ஏற்றிச் சென்றனர். இவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் காஸியாபாத்தில் கால்வாய் ஒன்றின் அருகே கொண்டு சென்று இறக்கினர். பிறகு பிஏசி படையினர் இவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி சில உடல்களை கால்வாயிலும் சில உடல்களை ஹிண்டான் நதியிலும் வீசி விட்டுச் சென்றனர். 38 பேர் கொல்லப்பட்டனர். பல உடல்கள் கண்டுபிடிக்கப் பட முடியவில்லை. 11 உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.
ஆனால் இதில் ஒரு 5 பேர் சம்பவ இடத்தில் செத்தது போல் நடித்துத் தப்பினர். கால்வாயிலிருந்தும் நதியிலிருந்தும் நீந்தி தப்பிய 5 பேர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கே தொடரப்பட்டது. அவர்கள் தங்கள் பயங்கர அனுபவங்களை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர்.
இந்தப் படுபாதகச் சம்பவம் நடந்த பிறகே உ.பி. போலீஸ் மீது சிறுபான்மைச் சமூகத்தினர் நம்பிக்கை இழந்தனர். இந்த வழக்கைக் கையாண்ட சிபி-சிஐடி 1996-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 20 வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் இதனால் எந்தப் பலனும் விளையவில்லை. இதனை உயர் நீதிமன்றம் தன் உத்தரவிலேயே குறிப்பிட்டிருந்தது.
விசாரணைகள் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டெல்லிக்கு மாற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விசாரணைகள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியதையடுத்து மாற்றக் கோரியது உச்ச நீதிமன்றம். இதனையடுத்தே ஆயுதப் படையைச் சேந்த 19 பேர் மீது குற்றங்கள் தாக்கல் செய்யப்பட்டன, இதில் 3 பேர் விசாரணையின் போதே இறந்ததால் 16 பேர் மீது வழக்குப் போடப்பட்டது. 2014 மே மாதத்தில்தான் குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ஏன் இத்தனை தாமதம்?
இருப்பினும் 2015-ல் ஆயுதப்படையைச் சேர்ந்த 16 பேரையும் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. போதிய சாட்சிகள் இல்லை என்ற வழக்கமான பாட்டைப் பாடி விடுதலை செய்தது, இந்தத் தீர்ப்பை பாதிக்கப்பட்டோர் உறவினர்களும், மனித உரிமைகள் ஆணையமும் எதிர்த்து வழ்க்கு தொடர்ந்தது. விசாரணை மேலும் நடைபெற இந்த வழக்கு உதவியது. பிறகு உயர் நீதிமன்றம் கூடுதல் சாட்சியங்களைப் பதிவு செய்ய அனுமதித்தது. அக்டோபர் 31, 2018-ல் 31 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 விடுவிப்புத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் மாற்றி எழுதியது.
இந்தப் படுகொலைகளை காவலில் எடுத்து கொலை என்ற பிரிவின் கீழும் சிறுபான்மைச் சமூகத்தினரில் ஒரு பிரிவினர் மீது வன்மத்துடன் நடத்தப்பட்ட படுகொலைகள் என்ற வகையிலும் நீதிமன்றம் மிகவும் சீரியசாக அணுகியது. ரத்த உறவுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு இந்தத் தீர்ப்பு அவர்கள் இத்தனை ஆண்டுகாலமாக அனுபவித்தத் துயரத்துக்குக் கிடைத்த நீதியாகும். நீண்ட கால சட்டப்போராட்டம் நீதியை நீர்த்துப் போகச் செய்திருக்கலாம். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் மீதான தண்டனை ஒரு மைல்கல் தீர்ப்பாகும். காரணம் காவல் கொலைகள் நம் நாட்டில் பெரிய அளவில் தண்டனைக்குள்ளாவதில்லை என்பதே கசப்பான உண்மை.
அடுத்து என்ன?
இந்த உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதன் மூலம் குற்றவாளிகள் தப்ப வாய்ப்புண்டு, அல்லது தண்டனையை அனுபவிக்கும் அளவுக்கு இவர்கள் வயது இல்லை, இவர்கள் வயதாகிவிட்டது என்று முடிவாகலாம். மேலும், ஹஷிம்புரா படுகொலையில் பிஏசியின் உயரதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை, அவர்களுக்கு கீழுள்ளவர்கள்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதுவும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
dinasuvadu.com