சூடானில் 3,000 இந்தியர்கள் சிக்கி தவிப்பா? – மத்திய அரசு தகவல்!
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் குறித்த கூடுதல் விவரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது என தகவல்.
சூடானில் கடந்த சில நாட்களாக துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல், சட்டவிதமாக இருப்பதாக கூறி, அந்நாட்டு ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தியர்கள் சிக்கி தவிப்பு:
இந்த மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270-ஆக உயர்ந்துள்ளதாகவும், 1,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள மோதலால் இந்தியர்கள் சிக்கி தவித்து வருவதாக கூறப்பட்டது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அறை:
இதில் ஒரு பகுதியாக சூடானில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வரும் நிலையில், இந்தியர்களுக்கு 24×7 உதவும் வகையில் வெளியுறவு அமைச்சகம் (MEA) சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்திருந்தது. இந்தியர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
கூட்டு முயற்சி:
அதுமட்டுமில்லாமல், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, சவூதி அரேபியா மற்றும் யுஏஇ ஆகிய நாடுகளுடன் இந்திய வெளியுறவுதுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இந்த நிலையில், சூடானில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 3,000 பேர் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணம்:
இந்த 3,000 இந்தியர்கள் குறித்த கூடுதல் விவரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது தூதரகம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசும், சூடான் கார்ட்டூம் தூதரக அதிகாரிகளும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.