30 PSLV, 10 GSLV, மார்க் 3 ராக்கெட்களை விண்ணில் ஏவ ரூ.10,900 கோடி நிதி..!
பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்களை ஏவுவதற்காக அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு சுமார் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதியை இஸ்ரோவுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரோவின் குண்டுப்பையன் என்றும் அழைக்கப்படுவதும் சுமார் 4 டன் எடையிலான செயற்கைக் கோள்களை சுமந்து செல்வதுமான 10 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்களை ஏவுவதற்கு மத்திய அமைச்சரவை 4 ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தமது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். எனவே இனி அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை ஏவ வெளிநாட்டு ஏவுதளங்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல், 30 பிஎஸ்எல்வி ராக்கெட்களை ஏவுவதற்காக மத்திய அமைச்சரவை 6 ஆயிரத்து 573 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சிவன், இந்திய விண்வெளி திட்டங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உத்வேகம் என்றும், பிரதமர் மோடி அரசின் கீழ் இஸ்ரோ மிகப்பெரிய அடி எடுத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.