#Breaking:இன்று முதல் 3 நாட்கள்;பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
காரைக்காலில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதில்,100-க்கும் மேற்பட்டோருக்கு காலரா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம்,காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.இதனால்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” அரசு அறிவித்தது.மேலும்,பொதுஇடங்களில் அதிக பேர் ஒன்று கூடுவதால் நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பிருக்கு என்பதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மறு உத்தரவு வருவரை இத்தடை அமலில் இருக்கும் என்றும்,மேலும்,உணவகங்கள்,பள்ளிகள், கல்லூரிகளில் கொதிக்க வைத்த தண்ணீரை பருக வேண்டும் எனவும்,இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில்,காலரா பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி,கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் 3 நாட்கள் விடுமுறை வழங்கி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.