படுக்கை பற்றாகுறை…! ராஜஸ்தானில் ஒரே படுக்கையில் 2-3 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை…!
ராஜஸ்தானில், பார்மரில் உள்ள மருத்துவமனையில், படுக்கை பற்றாக்குறை காரணமாக, ஒரே படுக்கையில், 2-3 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 3.66 லட்சம் பேர் கொரோனாவா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. படுக்கைகள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை பல இடங்களில் நிலவுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில், பார்மரில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றக்குறை நிலவுவதால், ஒரு படுக்கையில், 2-3 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பார்மரில், 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து, அங்கு வசிப்பவர்களின் ஒருவர் கூறுகையில், மக்கள் நிலைமையின் தீவிரத்தை அறியாமல் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், பார்மரைச் சேர்ந்த டாக்டர் பி.எல். பிர்ஷோய் கூறுகையில், விரைவில் மாவட்டத்தில் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஆக்ஸிஜன் மற்றும் பிற மருத்துவ வசதிகள் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகளின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கவும், கண்காணிக்கவும், சிகிச்சையளிக்கவும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும், இதன் விளைவாக ராஜஸ்தானில் கொரோனா வைரசால்பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதியதாக 17,921 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 159 பேர் உயிரிழந்துள்ளனர்.