ஊழலை ஒழிப்பதற்கே இரவு பகலாக பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனும் தொழிலதிபருமான ஜெய் அமித் ஷா ஒரு மிகப்பெரிய ஊழலில் நீந்திக்கொண்டிருக்கக் கூடும் என்ற, தொழில்துறையினரையும் அசர வைக்கிற செய்தி இப்போது வெளி வந்திருக்கிறது.இணையதள ஏடாகிய ‘தி ஒயர்’ ஞாயிறன்று (அக்.8) வெளியிட்டுள்ள அந்தச் செய்தி எந்த அளவுக்கு அதிகார பலம் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜக தலைவராக அமித் ஷா பதவியேற்ற பிறகு, இந்த மூன்று ஆண்டுகளில் அவரது மகன் ஜெய் அமித் ஷாவின் நிறுவன வணிக விற்று வரவு 16,000 மடங்கு எகிறியிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இந்தச் செய்தியை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்ற ஜெய் அமித்ஷாவின் வழக்குரைஞரின் மிரட்டலை மீறி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியின் சுருக்கம் வருமாறு:ஜெய் அமித் ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் பெயர் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட்டெட். நிறுவனங்கள் பதிவாளர் அலுவலக (ஆர்ஓசி) ஆவணங்களின்படி, 2012-2013 நிதியாண்டில் அந்த நிறுவனம் ரூ.6,230 இழப்பைச் சந்தித்தது. அதற்கடுத்த நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பு ரூ.1,724.
2014-15 நிதியாண்டில் அந்த நிறுவனம் ஈட்டிய வணிக வருவாய் வெறும் 50,000 ரூபாய். அதில் லாபம் வெறும் 18,728 ரூபாய். அதற்குப் பிறகு, 2015-16 நிதியாண்டில், அதன் வணிக வருவாய் 80கோடியே 50 லட்சம் ரூபாய்!ரிலையன்ஸ் நிறுவன உயர் நிலை நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினர் பரிமள் நத்வானியின் சம்பந்தியுமான ராஜேஷ் காண்ட்வலா நடத்துகிற நிதி நிறுவனம், உறுதிப்பத்திரம் இல்லாமல் அளித்த ரூ.15.80 கோடி திடீர்க்கடன் உட்பட, பல நிறுவனங்கள் “நிதியுதவி” செய்துள்ளன. அவ்வாறு தாராளமாகக் கடன் வழங்கிய ஒரு நிறுவனம், இந்திய புதுப்பிக்கத்தக்க விசை மேம்பாட்டு நிறுவனம். ஆம், இது ஒரு பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனம் ஜெய்க்குக் கடன் வழங்கியபோது, அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர் இன்றைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.வேறு சில நிறுவனங்கள் நிதி அளித்தது உள்பட, இத்தகைய பல திடுக்கிடும் தகவல்களை ‘தி ஒயர்’ ஏடு வெளியிட்டிருக்கிறது.
இதில் ஒரு ‘கிளைமாக்ஸ்’ திருப்பம் என்னவென்றால், சென்ற ஆண்டு, டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை நிறுத்திக்கொண்டதாக அறிவித்தது! தொடர்ந்து ஏற்பட்ட இழப்புகளைக் காரணமாகக் கூறியிருக்கிறது அந்த நிறுவனம்.அரசியலில் புயலைக் கிளப்பக்கூடிய இந்தத் தகவல்கள் பற்றி, ‘தி ஒயர்’ சார்பில் ஜெய் அமித் ஷாவைத் தொடர்பு கொண்டபோது, தாம் பயணத்தில் இருப்பதாகக் கூறி பதிலளிக்க அவர் மறுத்துவிட்டாராம். ஆனால், அவரது வழக்குரைஞர் தொடர்பு கொண்டு சில ஆவணங்களை அனுப்பியதோடு, தனது கட்சிக்காரர் மேல் அவதூறு செய்யக்கூடிய செய்தியை வெளியிட்டால் கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்தாராம்.