நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
பிறகு இரு அவையும் இன்று காலை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதோடு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரின் தகுதி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற்ற மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவியை வழங்கியது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதமானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள நிலையில், இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசுவார் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸின் பேச்சாளர்களாக ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி, ஹெபி ஈடன் ஆகியோர் பேச உள்ளனர்.