குஜராத் கனமழை வெள்ளம் : 28 பேர் பலி., 17,800 பேர் மீட்பு.!
குஜராத் : கனமழை வெள்ள பாதிப்பால் இதுவரை மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17,800 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்பால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநில அரசின் தரவுகளின்படி , குஜராத்தில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக பெய்யும் மழையளவில், 105 சதவீத மழையளவு கடந்த சில நாட்களில் மட்டுமே பெய்துள்ளது. மாநிலத்தில் அதிக மழைப் பற்றாக்குறை பதிவுகொண்ட 33 மாவட்டங்களில் அதன் சராசரி மழையளவில் 73 சதவீதம் அளவுக்கு மழை இந்த சில நாட்கள் மட்டுமே பெய்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சௌராஷ்டிரா பிராந்தியத்தில் முக்கிய பகுதிகளான தேவபூமி துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய் காலை 6 மணி முதல் நேற்று (புதன்) காலை 6 மணி வரை மிகக்கனமழை பெய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், குஜராத்தில் 13 தாலுகாக்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது, மேலும் 39 இடங்களில் 100 மிமீ மழை பெய்துள்ளது.
இன்று கனமழை சற்று குறைந்ததன் காரணமாக, விஸ்வாமித்ரி ஆற்றின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி, 37 அடியில் இருந்து 32 அடியாக குறைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 95 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மொத்தமாக, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் 17,800 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான வதோதராவில் இருந்து மட்டும் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.