ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் – மத்திய பிரதேச மருத்துவமனை..!
ஆம்போடெரிசின்-பி ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கியது. இதைத் தொடர்ந்து பூஞ்சைத் தொற்றுகள் நாட்டில் தலைத்துாக்கத் தொடங்கியுள்ளது. அதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என ரக ரசமாக பூஞ்சைத் தொற்றுகள் மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது.
மேலும் பூஞ்சைத் தொற்று அதிகரிக்க அதிகரிக்க இதற்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடும் அதிகமாகியுள்ளது. பூஞ்சைத் தொற்றால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருந்தாலும் உயிரழப்புகளானது மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.
இதையடுத்து மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு பண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரி (பி.எம்.சி) இல் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 27 நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின்-பி ஊசி போடப்பட்ட பின்னர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சனிக்கிழமை மாலையே கருப்பு பூஞ்சை சிகிச்சையில் முக்கிய மருந்தான இந்த ஊசி பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பி.எம்.சி மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் உமேஷ் படேல் தொலைபேசியில் பி.டி.ஐ. யிடம் கூறுகையில், மியூகோமைகோசிஸ் வார்டில் அனுமதிக்கப்பட்ட 42 நோயாளிகளில் குறைந்தது 27 நோயாளிகளுக்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆம்போடெரிசின்-பி ஊசி வழங்கப்பட்டது.
அந்த மருந்து அரசாங்கத்தால் தங்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும், அவர்களுக்கு ஊசி போடப்பட்ட உடனேயே நோயாளிகள் லேசான காய்ச்சல், நடுக்கம் மற்றும் வாந்தி போன்ற பாதகமான எதிர்விளைவுகளைப் பற்றி புகார் செய்யத் தொடங்கினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த ஊசி பயன்பாட்டை உடனேயே நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் பி.எம்.சி கண்காணிப்பாளர் மற்றும் டீன் தலையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை உடனடியாக தொடங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். அனைத்து நோயாளிகளின் நிலை தற்போது நிலையானதாக உள்ளதாகவும். பயப்படத் தேவையில்லை ”என்று டாக்டர் படேல் கூறியுள்ளார்.