மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு
மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது.
இதனால் பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் ஓட்டத்தால் ரயில் நிலைய மேம்பாலத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்டத்தில் சிக்கி எராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மும்பை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 100 ரயில் சேவையை தொடங்கி வைக்க மும்பை சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.