ஆந்திராவில் 260 கிலோ கஞ்சா பறிமுதல் ; 5 பேர் கைது!
ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்திற்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 260 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக 260 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வரப்பட்டு உள்ளது. இந்த கஞ்சா மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ராமு, தேஜா, ரங்காரெட்டி, நீல கந்தேஸ்வர் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் என காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் 38,000 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கடப்பா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.கே.என். அன்புராஜன் அவர்கள் கூறுகையில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கஞ்சா சிறிய பைகளில் அடைத்து கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இவ்வாறு கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.