26 ஆண்டுகளுக்கு முன் உயிரை காப்பாற்றிய குடும்பத்திற்காக நோன்பு இருக்கும் விகாஸ் கன்னா..!
உலகப்புகழ் பெற்ற சமையல் நிபுணரான விகாஸ் கன்னா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமையல் நிபுணராக வருகிறா. சமையலில் டாக்டர் பட்டம் பெற்ற விகாஸ் கன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி மிகு சம்பவம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
26 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்த போது கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதனால் யாராலும் ஓட்டலை விட்டு வெளியேற முடியவில்லை. சில நாட்களுக்கு ஓட்டலில் இருந்தார். பின்னர் கலவரம் சரியானதாக வந்த தகவலை அடுத்து தனது சகோதரனை சந்திக்க வெளியே சென்றார். அப்போது கலவர கும்பல் பல இடங்களில் இருந்தது. விகாசை பார்த்த முஸ்லீம் குடும்பம் ஒன்று அவரை தங்கள் வீட்டிற்குள் அழைத்து சென்றது.
அவர் யார் என்று கேட்ட கலவர கும்பலிடம் தனது மகன் என கூறிய அந்த குடும்பத்தினர் இரண்டு நாட்கள் அவரை வீட்டிற்குள் வைத்து பாதுகாத்தனர். கலவரம் கட்டுப்படுத்தப்பட்ட பின் விகாசின் சகோதரர்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு நன்றி கூறி விகாஸ் வீட்டை விட்டு சென்றார்.
தனது உயிரை காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் நடைபெறும் மாதத்தில் ஒரு நாள் நோன்பு இருந்து வருகிறார். தனக்கு உதவி செய்த குடும்பம் எங்குள்ளது என்பது குறித்து தெரியவில்லை என சென்ற ஆண்டு விகாஸ் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், விகாஸ் கன்னா அந்த முஸ்லீம் குடும்பத்தை கண்டறிந்து விட்டதாக தெரிவித்தார். அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். அவரின் இந்த கதை அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.