சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த 24 பேர் கைது!
- இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல மதுரையில் வந்து தங்கியிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இவர்களில் இருவர் சிங்களவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையிலிருந்து கனடாவிற்கு செல்வதற்காக கள்ளப்படகின் மூலமாக தூத்துக்குடி வழியே வந்து மதுரையில் தங்கியிருந்த இரண்டு சிங்களர்கள் உட்பட 23 இலங்கையை சேர்ந்த நபர்களும், ஏஜன்ட் ஒருவரும் என 24 பேர் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை கப்பலூரில் வீடு எடுத்து சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்தவர்கள் கடந்த பத்து நாட்கள் தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது அவர்களை கனடாவிற்கு அனுப்புவதற்காக அசோக்குமார் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு மதுரை கப்பலூரில் தங்க வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட அசோக்குமார் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், இந்தியாவிற்குள் தங்கியிருந்த 23 பேர் மற்றும் ஏஜென்ட் ஒருவர் உட்பட 24 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், கனடா நாட்டில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே அங்கு இருக்கக்கூடிய இலங்கை தமிழர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதால் அவர்களிடம் வேலை வாங்கி தருவதாக அசோக்கமார் என்பவர் இவர்களை தொடர்புகொண்டு இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு இவர்கள் 23 பேரையும் சட்டவிரோதமாக அழைத்து மதுரையில் தங்கவைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்த சில போலி ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அசோக் குமாரையும் போலீசார் தேடி வருகின்றனராம்.