அசாமில் குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,211 பேர் அதிரடி கைது!
அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக இதுவரை 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அம்மாநில முதலமைச்சர் தகவல்.
அசாமில் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தற்போது கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமூகக் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு எதிராக காவல்துறை சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்படுமாறு உத்தரவிடப்பட்டது.
குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 8,000 குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,211 பேர் இன்று காலை வரையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை திருமணம் தொடர்பாக இதுவரை 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை திருமணத்திற்கு எதிரான இயக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை தொடரும் என்றும் ஒரு ஹெல்ப்லைனும் தொடங்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மத நிறுவனங்களில் இதுபோன்ற திருமண சடங்குகளை நடத்திய 51 புரோகிதர்கள் மற்றும் காஜிகளை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வரை, பிஸ்வநாத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து துப்ரியில் 126 பேர், பக்ஸாவில் 120 பேர், பார்பேட்டாவில் 114 பேர் மற்றும் கோக்ரஜாரில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டவர்கள் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் 14-18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டம், 2006ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் மாநில அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.
அஸ்ஸாமில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது, குழந்தைத் திருமணமே முதன்மைக் காரணம் என கூறப்படுகிறது. மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களில் சராசரியாக 31 சதவீதம் தடைசெய்யப்பட்ட வயதில் நடைபெறுகின்றன எனவும் தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே, அஸ்ஸாம் அரசு குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், தங்கள் கணவர்கள் மற்றும் மகன்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெண்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்களை மட்டும் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? நாமும் அல்லது எங்கள் குழந்தைகளும் எப்படி வாழ்வோம்? எங்களிடம் வருமானம் இல்லை என்று கூறி வருகின்றனர். முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்த மாநிலம் தழுவிய அடக்குமுறை வெள்ளிக்கிழமை தொடங்கியது இந்த நடவடிக்கை அடுத்த ஆறு நாட்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.