குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!
குஜராத்தில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்.
குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா தனியார் துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயினை அகமதாபாத் மண்டலத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மூலம் துறைமுகத்தில் சோதனை செய்ததில் இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லி, அகமதாபாத் மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விசாரணையில் ஆப்கானிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் 10 நாள் காவலில் வைக்க புஜ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று அதிகாரி கூறினார். குறிப்பாக இந்த துறைமுகம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு விஜயவாடாவைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் என்ற நிறுவனம் இறக்குமதி செய்தது. இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளை ஆப்கானிஸ்தானிலிருந்து அரை பதப்படுத்தப்பட்ட டால்க் பவுடர் என்று கூறப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து சிலர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த டால்க் பவுடரை சோதனை செய்ததில் ஹெராயின் இருப்பதை உறுதி செய்தனர். தகவல் கொடுத்த நபர் அதில் போதைப்பொருளும் இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, போதை மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் (UNODC) கருத்துப்படி, ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அதன் அபின்(போதைபொருள்) மற்றும் ஏற்றுமதி உலகின் விநியோகத்தில் 80% க்கும் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.