உ.பியில் அடுத்த பயங்கரம்.! காவல் நிலையம் அருகே 21 வயது மாணவி சுட்டுக்கொலை.!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டப்பகலில் 21 வயது மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் நேற்று காலை கல்லூரித் தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த, மாணவியை மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
அம்மாவட்டத்தின் உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் ரோஷ்னி நெரிசலான சாலையைக் கடக்கும் போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. ரோஷ்னியின் தலையில் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ் அஹிர்வார் என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர், உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.