திருவனந்தபுரத்தின் மேயராக பதவியேற்ற 21 வயதான ஆர்யா ராஜேந்திரன்!
கேரள தலைநகரான திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன், இன்று பதவியேற்றார். அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரத்தை உள்ளடக்கி, ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி, திருவனந்தபுரம், முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன், அவரை எதிர்த்து போட்டியிட்ட யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை விட 2872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இதனையடுத்து, திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு ஒரு இளைஞரை பரிசீலிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதால், அக்கட்சியின் தலைமை இவரை நியமனம் செய்தது. இதனால் அம்மாநிலத்தில் முதல் இளம்வயது மேயர் என்ற புகழை படைத்தார். இந்நிலையில், ஆர்யா ராஜேந்திரன் இன்று திருவனந்தபுரத்தில் மேயராக பதவி ஏற்றார். இவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.