2024 மக்களவை தேர்தல் : காங்கிரஸ் தனித்து போட்டி.? ஆம் ஆத்மி அதிருப்தி.!
இன்னும் 6 மாதத்தில் நாடளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி என அரசியல் வட்டாரம் பரபரக்கிறது.
இதில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது , நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி உட்பட பிரதான காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் , வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியிலும் போட்டியிட ஆயத்தமாக ஆலோசிக்கப்பட்டதாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
இந்த தகவலை அடுத்து, டெல்லியில் 7 தொகுதியிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இருப்பதில் அர்த்தமில்லை என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.