2019ம் ஆண்டு தேர்தலின் போது மோடி அலையில் பாம்பு, கீரி அடித்துச் செல்லலாம்…! ‘புலி’யை அடக்கமுடியாது’…!
சிவசேனா கட்சி 2019ம் ஆண்டு தேர்தலின் போது மோடி அலையில் பாம்பு, கீரி என்று இருக்கும் எதிர்க்கட்சிகள் அடித்துச்செல்லலாம், ஆனால், புலியாக இருக்கும் எங்களை அடக்கமுடியாது என்று பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
பாஜகவின் நிறுவன நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது மும்பையில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோடியின் அலையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் அடித்துச்செல்லப்படுவார்கள்.
பாம்புகள், கீரிகள், நாய், பூனை என எதிர்துருவங்களாக இருந்தவர்கள் எதிர்க்கட்சி கூடாரத்தில் இருக்கிறார்கள். அனைவரும் மோடி அலையில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்று பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்து, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
பாஜக கட்சி கடந்த 2014ம் ஆண்டு இருந்த பொற்காலத்தின் நினைப்பிலேயே வாழ்ந்து வருகிறது. ஆனால், 2019ம் ஆண்டு நிலைமை முற்றிலும் வேறுபட்டது.
சமீபத்தில் நடந்த கோரக்பூர், புல்பூர் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக்கொண்டிருக்கும். பாஜகவைப் பொறுத்தவரை தாங்கள் வலிமையாக இருக்கிறோம், யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை, நண்பர்கள் உதவி தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.
இறக்கை இல்லாத விமானத்தில் இப்போது பாஜக பறந்து வருகிறது. தொடர்ந்து பறக்கும் வரை பாஜக நிலை நன்றாக இருக்கும். ஆனால், தரையிறங்க நினைக்கும் போது அது முடியாது, உடைந்து சுக்குநூறாக நொறுங்கும்.
2014-ம் ஆண்டு பொற்காலக் கனவில் இருக்கும் பாஜகவுக்கு வாழ்த்துக்கள்.2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் பாஜக பணிவு என்றவார்த்தையை மறந்துவிட்டார்கள்.
2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாய், பூனை, பாம்பு, கீரி ஆகியவை மோடியின் அலையில் அடித்துச் செல்லப்படும் என்று பாஜக தலைவர்(அமித் ஷா) கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை தரம்தாழ்ந்து பாஜக தலைவர் விமர்சித்துள்ளார்.
2019ம் ஆண்டு தேர்தலில் மோடி அலையில் பாம்பு,கீரி, நாய், பூனை ஆகியவை அடித்துச் செல்லபடலாம், ஆனால், புலியை(சிவசேனா)பணியவைக்க முடியாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.