நீங்கள் 2005-ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்ணா?இனி உங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு…
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சம உரிமையுண்டு என தெரிவித்துள்ளது.
குடும்பச் சொத்தில் ஆண்பிள்ளைகளைப் போலப் பெண்பிள்ளைகளுக்கும் சம பங்குண்டு என இந்து வாரிசுரிமைச்சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு அளிக்கும் இந்தச் சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள், இந்தச் சட்டத்திருத்தம் 2005ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது என்பதால் அதற்கு முன்பு பிறந்த பெண்களுக்குச் சொத்தில் பங்கு கிடையாது எனக் கூறிப் பங்கு கொடுக்க மறுத்து வருகின்றனர். இதுபோலத் தங்கள் சகோதரர்களால் சொத்துரிமை மறுக்கப்பட்ட சகோதரிகள் இருவர் 2002ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்ததால் அவர்களுக்குச் சொத்தில் உரிமை கிடையாது எனக் கூறி விசாரணை நீதிமன்றம் அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. உயர்நீதிமன்றத்திலும் அவர்களின் முறையீடு மறுக்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூசண் ஆகியோர் கொண்ட அமர்வு, குடும்பச் சொத்தில் மகன்களுக்கு உள்ள அதே அளவு சம உரிமை, மகள்களுக்கும் உண்டு என்றும், சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாளுக்கு முன்பு பிறந்ததைக் காரணம் காட்டி அதை மறுக்க முடியாது என்றும், பிறக்கும்போதே அந்த உரிமை பெண்களுக்குக் கிடைத்து விடுவதாகவும் தெரிவித்தனர்.
பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கும் சட்டம் நிறைவேறு முன்னர் தாக்கல் செய்த மற்றும் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளுக்கும் சட்டம் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.