கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவா தலைநகர் பனாஜியை அடுத்த, கன்டோலிம் என்ற கிராமத்தில், பெண் ஒருவர் தனியறையில், 20 ஆண்டுகளாக, அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில்,தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் கூறிய வீட்டில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், இருட்டறையில், நிர்வாண கோலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
அந்த பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பாக, தனது பெற்றோருடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டும் உள்ளார்.
ஆனால், அவரது கணவருக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணோடு திருமணம் ஆனது தெரியவரவே, உடனடியாக, கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கே, அந்த பெண் திரும்பி வந்துள்ளார்.
சில நாட்களில், அவர் நடவடிக்கையில் விசித்திரமான குணங்கள் தெரிய ஆரம்பித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த பெண்ணை ஒரு தனியறையில் தள்ளி, அடைத்து வைத்து விட்டனர். ஒரு ஜன்னல் வழியாக, தண்ணீர், உணவு மட்டும் கொடுத்து வந்துள்ளனர்.
இதனிடையே அவரின் பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இருட்டறையில், 20 ஆண்டுகளாக, அந்த பெண் வசித்து வந்த நிலையில், அவரின் சகோதரர்கள் மட்டும் தற்போது அதே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த விவகாரங்கள் எதுவுமே தெரியாமல், அவர் இருட்டறையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். தற்போது, போலீசார் அவரை மீட்டுள்ளனர். இதுபற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.