இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!
சீனாவை மிரட்டி வரும் HMPV வைரஸ் பாதிப்பு, இந்தியாவின் பெங்களூருவில் இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உறுதி செய்துள்ளது.
சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு எப்படி பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைரஸ் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. HMPV வைரஸ் பாதிப்பு குறித்து அச்சமடைய தேவையில்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு முழுவதும் உள்ள சுவாச நோய்களைக் கண்காணிக்க ICMR இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த இரண்டு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தைக்கு HMPV தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அந்த குழந்தை இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜன.3ம் தேதி அதே மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டது. தற்போது குழந்தை குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR detects two cases of HMPV in Karnataka https://t.co/fMcpP9d2sk pic.twitter.com/om303z2ZXT
— ChristinMathewPhilip (@ChristinMP_) January 6, 2025
HMPV வைரஸ் தொற்று:
HMPV எனப்படும் வைரஸ், கொரோனா போலவே சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இதன் அறிகுறிகளாகும். இதுவும் கொரோனா போலவே, மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இது சீனாவின் வடக்கு பகுதிகளில் அதிகம் பரவுகிறது. இருப்பினும், கொரோனா போல இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும், மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் இந்த HMPV வைரஸ் என்று உலக சுகாதார மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.