பேங்காக்கிலிருந்து 18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும்-முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்…!
டெல்லியில் புதியதாக 44 ஆக்சிஜன் நிலையங்கள் அமைப்பதற்காக பேங்காக்கிலிருந்து 18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் தினசரி 25,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பப்படுகிறது.
இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று பேசியதாவது,”டெல்லியில் அடுத்த மாத இறுதிக்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க உள்ளோம்.அதில் மத்திய அரசின் சார்பாக 8 நிலையங்களும்,மாநில அசின் சார்பாக 36 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் நிறுவப்பட உள்ளது.
இதற்காக,பிரான்ஸில் இருந்து 21 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளது.அதன்மூலம்,ஆக்சிஜன் பற்றாக்குறையை பெரிய அளவில் தீர்க்க முடியும்.
மேலும்,பாங்கொக்கிலிருந்து 18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் நாளை டெல்லி வரவுள்ளது.இதற்காக விமானப்படை விமானங்களைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்,அதற்கானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என்று நான் நம்புகிறேன்”,என்று கூறியுள்ளார்.