உத்திர பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 18 பேர் உயிரிழப்பு!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ-அயோத்யா தேசிய நெடுஞ்சாலை பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் இந்த பேருந்தின் முன்புறம் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்து உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம் வேகமாக வந்த லாரி திடீரென நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பேருந்தின் முன்பக்கம் படுத்திருந்த தொழிலாளர்கள் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிர் இழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கான மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.