சபரிமலை சர்ச்சை……….வெடித்த வன்முறை……சபரிமலையில் 144 தடை உத்தரவு……பதற்றத்தில் கேரளா….!!!
கேரளா சபரிமலை தீர்ப்பை எதிர்த்து ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளா நிலக்கல் பகுதியில் இன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களில் சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர்.இந்நிலையில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிக்கையாளர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முதன்முறையாக துலாம் மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. முன்னதாக நிலக்கல் பகுதியில் பெண் பக்தர்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க மறுத்து, இந்து அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்ட பந்தலை அகற்றியதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பம்பைக்குச் சென்ற கேரள அரசு பேருந்துகளில் பெண்கள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த சிலர் ஒன்று கூடி பேருந்தை முற்றுகையிட்டனர். பின்னர், அப்பேருந்தை திருப்பி அனுப்பியுள்ளனர்.
கேரள போலீசார், பேருந்துகளை முற்றுகையிட்டவர்களை கைது செய்தனர். இந்த பதற்றமான சூழ்நிலையில் இன்றிரவு முதல் நாளை மாலை வரை நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு அறிவித்துள்ளார். பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
DINASUVADU